Saturday, February 8, 2014

ஒரு சிலாகிப்பு! ஒரு Face palm!

இந்த இரு நாட்களில் இரு வேறு  நிகழ்வுகளை கடந்திருக்கிறேன்... முதலில் Face palm என்னவென்பதை சொல்லிவிடுகிறேன்...

நேற்று காலை வேலை வெட்டி இல்லாமல் இன்ஸ்டாவுக்கு ஃபோட்டோ தேடிக்கொண்டு மொட்டைமாடிக்கு சென்றேன்... அப்போது அவளைப் பார்த்தேன்.. பக்கத்து வீட்டு காலனி வீடுகள் ஒன்றில் வசிப்பவள்..வீட்டுக்கு ஒரே பெண் அவள்... தோழிக்கு தங்கை முறை... பத்தறை மணி வெயிலுக்கு அவ்வளவு அழகாய் ஜொலித்தாள்...

”பாப்பா நீ ரொம்ப அழகா இருக்கம்மா என்றேன்”

துணியைப் பிழிகையில் கோபமாய் ஒரு முறைப்பு... “ நான் ஒன்னும் பாப்பா இல்ல, இன்னும் ரெண்டு வருஷத்துல எனக்கு கல்யாணம் என்றாள்”

நான் ஷாக்காகி ”என்னம்மா படிக்கிறே என்றேன்” “பத்தாங்கிளாஸ்” என்கிறாள். சரிம்மா மாப்பிள்ளைக்கு என்ன வயசு? என்ன பண்றார் என்கிறேன்... அவளோ கூலாக 29 வயசு ஆகுது அவங்களுக்கு, இப்போ மெட்ராஸ்ல வேலை பாக்குறாங்க என்கிறாள்...

மாப்பிள்ளை சொந்தமாம்மா என்கிறேன்... அதற்கும் இல்ல பிறத்தி என்கிறாள்...

ஆகக்கடைசியாக அதுக்குள்ள கல்யாணம் பண்றோமேன்னு வருத்தமா இல்லியா? படிக்கலியேன்னு வருத்தமா இல்லியா என்கிறேன்... சொன்னாளே ஒரு பதில்!

”படிச்சி என்னக்கா பண்ணப்போறேன்? பொம்பளப்புள்ள நான்.. கெட்டிக்குடுத்துட்டா அப்பா அம்மாவும் நிம்மதியா இருப்பாங்க, பொம்பளப்புள்ளைய வீட்டுல வெச்சிருக்கதும் வயித்துல நெருப்ப கட்டிக்கிட்ட மாதிரியாச்சே!... படிச்சும் ப்ரயோஜனம் இல்ல, அதான் கல்யாணம் பண்ணி செட்டிலாவலாமேன்னு.... என்னை இவ்ளோ கேக்குறீங்களே, காலேஜுதண்ட போய் படிச்சிட்டு நீங்க வீட்லதானே இருக்கீங்க.... எங்கக்காவயே கண்ணாலமெல்லாம் பதினொன்னாம் கிளாஸ் முடிச்சிட்டு பண்ணிக்காதேன்னீங்களாம்... சொல்ச்சி உங்கட்ட பேசாதேன்னு”

தட் நல்லதுக்கு காலமில்லை, Facepalm Moment....

அந்த சிலாகிக்க வைத்த சம்பவம் பேஸ்புக்கில் நிலைத்தகவலாக எழுதியதுதான்....

காலை 10.30 மணிக்கும் மேல் இருக்கும், ஒரு பாட்டி சிறுவனோடு வந்தார்கள்.. “வீட்ல வேலை இருக்காம்மா, புல்லு செதுக்குறது மாதிரி என்று கேட்டுக்கொண்டு.. பூவிழுந்த கண்.. ஒரு கண் தான் தெரியும் போல..
வேலை இருக்கு எவ்ளோ கேப்பீங்க என்றேன்.. 
காசு வேணாம்மா வீட்ல மீந்த சாப்பாடு இருந்தா கொடும்மா என்றார்கள்.. ஒரு வீட்ல சாப்பாடு தரேன்னாங்க, வேலை செஞ்சேன் ஆனா காசுதான் கொடுத்தாங்க. ஓட்டல்லியும் டீ மட்டும்தான் இப்போதைக்கு இருக்குன்னுட்டான்.. பேரன் பசிதாங்க மாட்டான்.. அதான் என்றார்கள்...
சாப்பாடு இப்போதான் ஒரு பிச்சைக்காரனுக்கு கொடுத்தேன்,
பழையதுதான் இருக்கு என்று தயங்கினேன்.. வாங்கிக்கொண்டார்கள்... (பிச்சைக்காரன் வாங்க மறுத்துவிட்டான்)சிறுவனிடம் பிஸ்கட் பாக்கெட் இரண்டு கொடுத்தேன்.. வேல செய்யாம இனாமா ஏதும் வான்கூதாது... பாத்தி சொல்லீக்கு என்றான்... இது வேலைக்காகத்தான் என்று சொல்லி பாட்டி ம்ம் என்ற பின்னர்தான் வாங்கிக்கொண்டான்..

பெரும்பாலும் இம்மாதிரி உள்ளவர்களை மகன் வீட்டைவிட்டு துரத்தியிருப்பார். ஆனால் இவரின் பெரிய மகன் மனைவியோடு விபத்தில் இறந்துவிட்டாராம். மகளுக்கு இப்போதான் திருமணம் முடிந்தது.. சின்னவன கடன் வாங்கி இஞ்சினேர் ஆக்கிட்டேன், வெளிநாட்டுல எல்லாக் கடனயும் அடைக்க கஸ்டப்பட்றான்.. அதான் என் ஜீவனம் நானே பாத்துக்குறேன்னு சண்ட போட்டு வேலைக்கி போறேன்... என்கிறார் இந்த வெள்ளையம்மாள் பாட்டி... 
இதில் ஹைலைட்டே அந்த பொடியன் தான்... பாட்டிக்கு உதவுகிறான்.. படிப்பென்றால் உயிராம்.. ”அப்பாம்மாக்கு ஊச்சி போட்டாங்க ஆனா அப்பாம்மா சாமிட்டே போட்டாங்க... நான் ஊச்சி போட்டு யாரும் சாமீட்ட போவாம பாத்துக்னும் என்கிறான்...” படிப்பு சொல்லித் தரேன் சாயங்காலம் வரியா என்றேன்.. ”நாண்தாம்.. ’இனாமா ஏதும் நாண்தாம்..’” என்கிறான்.. பிச்சை புகினும் கற்கை நன்றேன்னு ஒளவையார் சொல்லிருக்காங்கடா என்றேன்.. அந்த பாத்தி அப்பி சொல்ச்சு என்பாத்தி இப்பி சொல்ச்சு.. என்கிறான்... அவனை பள்ளிக்கனுப்ப நாளை கூலி வேலைக்கு செல்லப்போகிறாராம் பாட்டி!


இருவேறு அதிகமாய் பாதித்த நிகழ்வுகள் இவை! எத்தனையோ உணர்வுகள் இவற்றுள்!.. பகிரத் தோண்றியது...

படித்தமைக்கு நன்றி....
நறுமுகை!

Monday, February 3, 2014

பெண்களே, Please Take Care!

இந்தப் பதிவை எழுதுவது குறித்து நெடுநாளாய் ஒரு தயக்கம், இப்போதாவது எழுதிவிடுகிறேன்...

கிராமப்புறங்களில் வாழ்வதில் இருக்கும் ஒரு பெரும் செளகர்யம்/அசெளகர்யம் எல்லா வீட்டுக் கதைகளும் நம் வீட்டு வரவேற்பறைக்கே கிடைத்துவிடும்...
சிலர் கேட்டுவிட்டு அப்பாடா நம்ம வீட்டு கதைக்கு இது மோசம் என திருப்திபட்டுக்கொள்வார்கள், சிலர் வருந்தி அவர்களுக்காக இரங்குவார்கள்... அப்படியாக ஒரு பெண்ணைப் பற்றிய சோகமான ஹேப்பி எண்டிங் கதை தான் ரீசெண்ட் ஹிட்... 

அவளுக்கு அப்போதுதான் திருமணம் முடிந்து மூன்று மாதங்களாகியிருந்ததாம், Pregnancy Testக்காக ஒரு அரைகுறையை அணுகியிருக்கிறார்கள் (confirm ஆகிட்டா பெரிய டாக்டர்ட போயிக்கலாம் எதுக்கு வீண்செலவு என்ற நல்லெண்ணம்) அந்த அரைகுறை Scan செய்ய சொல்லியிருக்கிறது, பின்னர் தான் தெரியவந்தது அவளுக்கு கருப்பையில் கட்டி இருப்பது.. அரைகுறையோ டவுனுக்கு அழைச்சிட்டு போங்க, கேன்சர் மாதிரி தெரியிது என்றுவிட்டார்..

கணவனுக்கோ கடும் வேதனை, கோபம், ஹீரோயினோ கண்கவர் கண்ணாளன் தானே என்ற தைரியத்தில், வாயை வைத்துக்கொண்டு சும்மா இருக்காமல் புலம்பித் தீர்க்கையில் தப்பித் தவறி தனக்கு திருமணமாவதற்கு ஒரு வருடம் முன்வரை இருந்த Irregular Periods பற்றியும், அப்போதைக்கு Scan செய்தபோதெல்லாம் இப்படி வரவில்லையென்றும் கூறியிருக்கிறாள். அவ்வளவுதான் கேன்சர் உள்ளவளை ஏமாற்றி தன் தலையில் கட்டிவிட்டதாகவும் இன்ன பிற வசவுகளாலும் தாட் பூட் தஞ்சாவூர் என வானத்துக்கும் பூமிக்கும் குதிக்க இவள் அதிர்ந்து போக.. பிரச்சினை டைவர்ஸ் வரை சென்றுவிட்டது....

ஏழை குடும்பம் வேறு... கட்டிக்கான சிகிச்சை முடித்து, டெஸ்ட் செய்து பார்ததற்கு அது வெறும் தண்ணீர் கட்டிதான் என்றுவிட்டார்கள்.. பின்னர் ஊர் பெரியவர்கள் சேர்ந்து டாக்டர் சர்டிபிகேட் எல்லாம் வாங்கிக் கொடுத்து பிரச்சினையை முடித்தார்கள்... 

ஓரு மாதம் முன்புதான் ஒரு தங்கச்சிலைக்கு அம்மாவாகியிருக்கிறாள் அப்பெண்...

விஷயம் 1: எப்படிப்பட்ட சின்ன விஷயம்  ஆனாலும் மருத்துவ பிரச்சினைகளை கணவரிடம் மறைப்பது ஆபத்து...

விஷயம் 2: உடல் எடை அதிகமிருப்பவர்களுக்கு பூப்படைந்தது முதலே நிறைய பிரச்சினைகள் இருக்குமாம்(நம்ம பாஸ்ட்ஃபுட் கலாச்சாரம் அப்படி) அதனால் உடல் எடையை BMI அளவிற்கே பார்த்துக்கொள்ள வேண்டுமாம், ஹீமோக்ளோபின் அளவும் பெண்ணுக்கு சரியான அளவில் இருக்க வேண்டியது அவசியம். ஏனெனில் அதனாலும் பல பிரச்சினைகள் வரலாம். 

விஷயம் 3: பெண்கள் திருமணத்திற்கு முன், Hormone மாத்திரைகளை ஒரு மருத்துவருக்கு இருவரைக் கேட்காமல் உட்கொள்வது தவறாம்...

விஷயம் 4: இன்றைய காலக்கட்டத்தில் பெண்களை கேன்சர் அதிகமாய் அச்சுறுத்தி வருகிறது. எனவே வாரத்திற்கு ஒருமுறையாவது நம்மைநாமே பரிசோதித்துக் கொள்ள வேண்டுமாம், சந்தேகிக்கும் படியாக எந்த கட்டி இருந்தாலும் உடனே மருத்துவரை சந்திப்பது நல்லது. ஏனெனில் ஆரம்பக் கட்டங்களிலேயே மருத்துவரை சந்திப்பது மாத்திரை, ஊசிகள் இவைகளோடு நோயை குணமாக்கிக் கொள்ள உதவும்...தேவையெனில் HPV vaccine shot (Injection). Human papilloma virus shot (Injection)கூட எடுத்துக்கொள்ளலாம்<<மருத்துவரின் அனுமதி பெற்று>>.

விஷயம் 5: எதுவானாலும் அரைகுறையை அணுகாதீர்கள், முதலுதவி போன்றவைக்கு வேண்டுமானால் அவர்கள் உதவலாம்....

-------------------------------------------------------------படித்தமைக்கு நன்றி-----------------
பி.கு: நான் டாக்டரெல்லாம் இல்லை. பெண்களுக்கான உபாதைகள் பெருகி வருகிறது, பல பெண்கள் தயங்குவதில்லை, சிலர் வெட்கப்பட்டு தயங்கி மாத்திரைகளால் குணமாக்கிக் கொள்ளவேண்டியதையெல்லாம் அறுவைசிகிச்சை வரை இட்டுச் செல்கிறார்கள்... என அந்தப்பெண்ணை பரிசோதித்த பெண் மருத்துவர் சொன்னாராம்... அந்த மருத்துவர் சொன்னவைகளைத்தான் இங்கே எழுதியுள்ளேன். தவறிருப்பின் திருத்தவும்.

Sunday, February 2, 2014

ஜனவரி பதினைந்து...

தனித்திருக்க விரும்பாத மாலைப்பொழுது.. வேறு வழியில்லை... தனிமைதான் இப்போதைக்கு வாய்த்தது..

கடற்கரைக்காவது போய்வரலாம் என கிளம்பினேன்..
முன்னிரவு.. பெளர்ணமி..தென்றல்... காதில் ஐபாட் ஹெட்செட்... ஸ்கூட்டியை பார்க் செய்துவிட்டு அலையில் கால்பட அமர்ந்தாயிற்று....

என்னை அறியாமல் அழத்தொடங்கியிருந்தேன்...

அம்மா எந்திரிங்க..என்றார் ஒருவர் ..

ஏன் சார்? யார் நீங்க? நான் ஏன் எழனும்?

தற்கொலை எல்லாம் தப்பும்மா... கொஞ்சம் பேசலாம் வாங்க...

சத்தமாய் சிரித்தபடி சொன்னேன்.. சும்மா வந்தேன் சார்.தற்கொலைல்லாம் கோழைங்க... அப்போதுதான் கவனித்தேன்.. அது அவன். கேலி செய்திருக்கிறான்... சற்று திகைத்துவிட்டு தொடர்ந்தேன்...

எப்படி இருக்கே ப்ர.... அதற்குமேல் பேசத் தெரியவில்லை...

தொடர்ந்தான்..

ம்ம் இருக்கேன் வனி, பெங்களூர்ல வேலை, நல்ல சேலரி, வீடு கார் எல்லாம் இருக்கு...பொண்ணு பாக்காவான்னு கேட்டுட்டே இருக்காங்க அம்மா.. நீ...கல்யாணம்...?
பதிலளிக்க தோன்றாமல்  நான். அதற்கும் அவனைத் திட்டிக்கொண்டிருந்தேன்..

(பேச்சைத் தொடங்கிட்டா சடசடனு பேசத் ஆரம்பிச்சிருவானுங்க... ச்சை இவனுக்கு இல்லாத தயக்கம் எனக்கெதுக்கு?!)

வனி.....என பதிலுக்கு ஊக்கினான்..

ம்ம்... மிஸ். வனிதா ராஜமாணிக்கம்..

ஹாஹா.. ஆமாம்மில்ல.. மிஸ்.வனிதா ராஜமாணிக்கம் மேடம், எப்படி இருக்கீங்க?

(எப்டிடா உன்னால மட்டும் சிரிக்க முடியிது..... ) மனது சபித்தது அவனை...
நல்லா இருக்கேன்.. சந்தோஷமா... ரொம்ப சந்தோஷமா... நல்ல ஜாப், நல்ல சேலரி,... சன்னா செய்யத்தெரியுமா, ஹம் ஆப்கி ஹைன் கெளன் பாக்கத் தெரியுமா, வியாதின்னு வருமான்னு கண்ட கண்றாவியும் யோசிக்கத் தேவையில்லை,............. ஊரு, உறவு, கெளரவம், சாக்கடைன்னு ஆசையை கட்டுப்படுத்திக்கத் தேவையில்லை... சந்தோஷமா இருக்கேன்... ரொம்ப சந்தோஷமா இருக்கேன்....

இப்போது சபிப்பது அவன்முறையாயிற்று....
(சைக்கோ சைக்கோ... கொஞ்சம் பேசினா குத்திக்காட்ட தொடங்கிருவாளே... இவகிட்ட பேசிருக்கவே கூடாது.. பாக்காத மாதிரி போயிருக்கனும்)

ஏன் இவ்ளோ டென்சன் ஆகுற?! சந்தோஷமா இருக்கவங்கதான் இப்படி கடற்கரைல உக்காந்திருப்பாங்களா?

ஏன்? இயற்கைய ரசிக்க வரக்கூடாதா?

அதுக்கு ஏன் அழனும்?

இழந்தவங்கள நெனச்சு...

மனதுக்குள் சிரித்துக்கொண்டிருப்பான்..
(நெனச்சேண்டி.... நீ இன்னும் என்னை மறந்திருக்கமாட்டே..)
ஹ்ம்ம்........ இன்னும்............. மறக்கலியா... அதையெல்லாம்?



ஹலோ மிஸ்டர்.. இழந்தது அம்மா அப்பாவை....  ஏமாற்றத்தோடு சொன்னேன்...

அதற்கு ஆச்சர்யமாய்க் கேட்டான். அப்பாவுமா?! எப்படி? என...

கேட்டாயல்லவா வாங்கிக்கொள்..
சில துரோகிகள் இருக்காங்க.. மார்பக புற்றுநோய்ன்னு அம்மாக்கு வந்துட்டா பொண்ணுக்கும் வரும்னு அம்மா பேசுறதுக்கெல்லாம் மண்டைய ஆட்டுவாங்க... பூம் பூம் மாடுங்க.... அவங்களுக்கு தெரிஞ்சதெல்லாம் அது ஒரு அசிங்கமான வியாதி, தொத்து வியாதி.... அவங்களால என் அம்மாவை இழந்தேன்... அம்மா இல்லாத ஏக்கம் அப்பாவைக் கொன்னுடுச்சு...

செல் கிணுகிணுத்தது...(ஆரோமலே...................)


நல்லவேளையாக ஒரு மார்க்கெட்டிங் கால்...

“சொல்லுங்க டியர், பிசியெல்லாம் இல்ல. அம்மா பிறந்தநாள்... பீச் வந்தேன்... ம்ம் சரி... சரீ.... கெளம்பிட்டேன் ஹனி”

 அவனிடம் திரும்பி..

அப்றம்...சொல்னுன்னு நெனச்சேன்... எப்பவும் அப்பா அம்மா பேச்சையே கேளு... அந்த லெட்டர்ஸ்.. அப்பறம் உனக்கு நான் எழுதின டைரி எல்லாத்தையும் நான் எரிச்சாப்ல நீயும் எரிச்சுரு.... ஓகே... இன்னும் ஹிந்தில குட்பை சொல்ல கத்துக்கலை... சோ... குட்பை...

அவன் பதிலுக்கு காத்திராமல் கிளம்பிவிட்டேன்..

காற்றைக்  கிழித்தபடி ஒரு பயணம்...

ஓடிவந்துட்டேனே.....


பயந்துட்டேன்னு நெனச்சுப்பானோ.....

நம்பிருப்பானா? இல்ல மாட்டான்......

அய்யோ நம்பிருக்கனும்....

நம்பிருப்பான் நம்பிருப்பான்..மறந்துதானே இருந்தான் இவ்ளோ நாளும்.....

என்னை ஏன் அவன் தேடி வரணும்...

 நாந்தான் அவன மறந்துட்டேனே.....

 வரும் வழியெல்லாம் மனதின் ஓரம் புலம்பியபடி இருந்தது..

 எப்படி திறந்தேனென்று தெரியவில்லை... வீட்டுக்குள் நுழைந்து.. பீரோவைத் திறந்து டைரியை எடுத்திருக்கிறேன்....

கைக்கடிகாரத்தை பார்த்துக்கொண்டேன்.. கவனித்திருப்பானோ?!

மணி... 9.45.. அவன் என்னைத் துரத்திக் கொண்டிருந்தான்... ஜனவரி பதினைந்து......

Chennai,
15.1.2009
Vani... My Angel.... Dunno how she entered into my heart... Watta Day... She accepted my proposal today... Dunno how this god's golden art has fallen in love with................அதற்கு  மேல் வாசிக்க இயலவில்லை.....

.............ப்ரதீக்................

Thursday, November 14, 2013

வேண்டுகோள்!

எத்தனை இழந்திருப்பேன்,  மீட்கவே முடியாமல்! எப்படி கடப்பேன்,
அந்த 9 மணி 35 நாழிகையை நாளைய பொழுதில் என்பதெல்லாம் புதிர்தான்!

http://pesatheriadaval.blogspot.in/2013/03/blog-post.html

இது நடந்து ஒரு வருட காலமாயிற்று! மறக்கவே இயலாத 365 நாட்கள்!
"திட்டவாச்சும் நீ வீட்ல இருக்கனும், வந்துரு!" என மானசீகமாய் கதறிய இதயத்தின் பேரோசை, இன்னமும் முடியாத உபாதைகள், வேதனைகள்!

எத்தனை இழந்திருப்பேன்,  மீட்கவே முடியாமல்!
கடந்த சில வாரங்களாக இதயத்தின் ஒவ்வொரு அறையினையும் குடைந்தெடுக்கும் அவ்வலியினின்று மீண்டு எழுதுகிறேன் இப்பதிவினை!

விவரிக்க முடியாத சில இதய குறுகுறுப்புகளுக்கு வர்ணமோ, வார்த்தையோ உருவம் கொடுக்காது! அஃதப்படியே இப்பதிவும்!

துளிர்த்து சிதறிய விழிநீரை, அதன் வலியை உணர்ந்தாலன்றி புரியாது!

PLEASE DO WEAR HELMET!
AVOID RASH DRIVING!
DON'T DRINK AND DRIVE!


Sunday, November 3, 2013

அம்மா வந்திருந்தாள்- டைரிப் பக்கங்களிலிருந்து!

ஓர் பின்காலை வேளை, பிள்ளைகளெல்லாம் பள்ளிக்கு அனுப்பிய பின்னர் கால் தேய யாரோ சாலையில் கஷ்டப்பட்டு நடக்கும் சப்தம். அம்மா வந்திருந்தாள். 

எல்லா உறவுகளினின்றும் அவளுக்கு மட்டும் என் எலும்புக்கும் சதைக்குமான வித்தியாசம் தெரிந்திருக்கிறது.

நானே மறந்துப்போன என் விருப்பமான பலகாரங்களெல்லாம் அவளுக்கு மட்டும் இன்றளவும் மறக்கவேயில்லை! அவளோடு என் விருப்பங்களெல்லாம் என் வீட்டுப்படி ஏறிவிடுகின்றன!

செவ்வந்திப்பூ, கூரைப்புடவை, கடலைமிட்டாய், அஞ்சாறு முத்தங்களோடு மனதுக்குள் அமர்ந்துகொண்ட்து! 

வாரம் ஒருமுறை என்றிருந்தது மாறி மாதமொருமுறை ஆகி, நேரம் கிடைக்கையில் என்றாகிப்போன அவள் வீட்டுக்கான என் பயணங்களில் தொலைந்துப்போன என் இன்பங்களை ஒரே பார்வையில் தந்துவிட்டு போனாள் அவள்!

கால்கட்டுப் போட்ட புதிதில் அவள் முந்தானை நனையாத என் வருகைகளே பதிவானதில்லை அவளிருதயத்தில்! "ஏன்மா இந்தாளுக்கு என்னைக் கட்டிவெச்சே!" என்று மனதுக்குள் சுக்கல் சுக்கலாய் அவள் உடையும் சத்தத்தை உணராமலேயே புலம்பிய நினைவுகளெல்லாம், அவள் காலிங் பெல் அழுத்தும் முன் என்னவர் என் உச்சி முகர்தலை அவள் பார்த்த வேளையில் அவளுக்கு வந்துபோயிருக்கும்!

கெலாக்ஸ், ஆலிவ் ஆயில், ஸ்கிம்ட் மில்க் சுகர்ப்ரீ பால்கோவா எனும் என் டயட்டெல்லாம் அவளுக்குத் தெரியாது, பேரன் பேத்திக்கு திரட்டுப்பால், மாப்பிள்ளைக்கு முந்திரிக்கொத்து, நெய் முறுக்கு, மகளுக்கு புட்டரிசி பாயாசத்தோடு கொஞ்சம் சத்துமாக் கஞ்சியும் அவள் படைத்தாள்!
மணமாகி பத்து வருடம் ஆனபின்னும் மருமகப்பிள்ளைக்கு பரிசுகள் கொடுக்க தவறுவதேயில்லை அம்மாக்கள். ஃபேஸ்புக் கல்யாணம், ஸ்கைப் கல்யாணமெல்லாம் நடக்கும் இக்காலத்திலும் இவள் மட்டும் மருமகன் முன் நிற்கக்கூடாதென என் பின்னால் மறைந்துகொண்டாள்.

கொஞ்சம் மூத்திருந்தாள், 60 வயதுக்கு 80தின் முதுமை. ஓர் கண்ணாடி. அள்ளி அப்பிக்கொண்ட புன்னகை. நன்றாகத்தான் இருக்கிறேன் எனக் காட்டிக்கொண்ட தென்பு, நிறைய நரை, நிறையக் கணிவு, கொஞ்சம் முதுமை, நிறையத் தனிமை! மாமியார், மாமனாரை முதலில் வீட்டுக்கு அழைத்துவர வேண்டும் என உறுதிமொழி எடுத்துக்கொண்டு அவளைப் பார்த்தேன், ஏனோ அக்கண்கள் என் மடியில் சாயும் அனுமதியைக் கேட்டு மயங்கி விழத்தொடங்கினாள்......

போர்வையை வீசியெறிந்துவிட்டு ஓடோடி சமையற்கட்டை அடைந்தேன், அவள் போட்டுக்கொண்டிருந்த வெல்லம் போட்ட தேயிலை மணம் என்னை சுண்டி இழுந்துக்கொண்டிருந்தது! அவளை அணைத்து கன்னத்தில் முத்தமிட்டேன்...


ச்சீ கழுதை, போடி போய் முதல்ல பல்லை வெளக்கு என கோபமாய் முறைத்தாள்!

என்னவரின் அன்னையும் என் அன்னையே என மனதினுள் ஓர் முனுமுனுப்பு கேட்டது!


Friday, September 20, 2013

கெளரவத்துக்குப் பிறந்தவர்!

அம்மா, நா ஸ்கூலுக்கு போய்ட்டு வரேன் என கிளம்பிய தாரினியை தடுத்து நிறுத்தினார் அவள் தந்தை.

எங்கடி கெளம்பிட்ட?

ஸ்கூலுக்குப்பா.

நீ ஸ்கூலுக்கெல்லாம் போக வேணாம் போயி சமையலைப் பாரு என்றார் அப்பாவினுடனிருந்த மாமா.

ஏன் மாமா ஏன் நா ஸ்கூலுக்கு போகக்கூடாது? என இயன்றவரை பொறுமையுடன் கேட்டாள் தாரினி. அன்று அவளுக்கு பன்னிரெண்டாம் வகுப்பு அரையாண்டு கடைசித் தேர்வு.

ம்ம் பக்கத்துவீட்டு பட்டு எவங்கூடவோ போயிட்டா, அதான்.

அவ போறதுக்கும் நான் ஸ்கூலுக்கு போறதுக்கும் என்ன மாமா சம்பந்தம்?!

பொட்டைக் கழுத, என்னடி மாமாவ எதுத்து கேள்வி கேக்குற உள்ள போ, ஏய் மஞ்சு என்ன புள்ள வளத்துருக்க, வீதியில நின்னுக்கிட்டு ஆம்பிள்ளைங்கள எதுத்து வேற பேசுறா?

ஏன் அவங்களுக்கு மட்டும்தான் புள்ளயா உங்களுக்கு இல்லியா? நீங்க சரியா வளர்க்குறது.... நாவோடு ஒட்டி நின்ற எழுத்துக்களை விழுங்கியவாறு மிரட்சிப் பார்வை பார்த்தபடி வீட்டுக்குள் போனாள் தாரினி!

ம்மா, இன்னிக்கு கடசி பரிச்சை, இன்னிக்குபோயா அப்பா இப்படி ஆர்பாட்டம் செய்யனும்?

என்னடி வாய் நீளுது?!, நேத்து உங்கூட படிச்சவ ஒரு துளுக்கன் கூட ஓடிப்போயிட்டா, தெரியுமில்லே? உங்கப்பா ஊர் பெரியாம்பிளை, உன் பேரு கெட்டா, அவருக்குத்தானே அவமானம்!

விசும்பலை அடக்கியபடி அறைக்கதவை அறைந்து சாத்தி தாளிட்டுக்கொண்டாள் தாரினி.

அடுத்தமுறை கோவத்தை கதவுல காட்டுனே, கையில சூடு வெச்சிடுவேன் என கறுவினாள் தாய்!

தாரினியுடன் பயின்ற மாணவி ஓடிப்போன பின்னர், அந்த தாய்க்கு பயம் வந்திருந்தது.

அதே, "ஊர் பெரியாம்பிளை மவ, படிக்கலியா?!" என்ற வார்த்தைக்காகவும், மகளின் கண்ணீருக்காக வக்காலத்துவாங்கிய தன் அக்காவின் பேச்சை தட்ட முடியாததாலும் தன் செல்வாக்கை பயன்படுத்தி (காசுதான்) அவளை இறுதித் தேர்வை மட்டும் எழுத அனுமதித்தார்.

தேர்வு முடிந்த கையோடு திருமணம் என்ற சத்தியவாக்கை பெற்றுக்கொண்டபின்னர்தான்.

பள்ளியிலேயே சிறப்பான மாணவியாதலால் தலைமை ஆசிரியர் மேற்கொண்டு படிக்க வைக்கச்சொல்லி மிகவும் கேட்டுக்கொண்டார்.

அழகான, அன்பான தன் மகளுக்கு தன்னைவிட சொத்து பத்தும், அழகும், அதிகம் இருக்கும் மாப்பிள்ளையைத் தேடிப்பிடித்தார். நிச்சயத்துக்கு வந்த அந்த வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு மாநிறமான நம் தாரினியின் மீது பெரிதாய் ஈடுபாடு எதுவும் இல்லை. தன் தந்தையின் மேலிருந்த பயத்தினால் பெண் ஃபோட்டோவை முன்னமே பார்த்திராமல் போன தன் மடத்தனத்தை நொந்துக்கொண்டு அப்பாவை பழிவாங்கவென்றே பேசினான்.

பொண்ணுக்கு இன்னும் பதினெட்டு வயசு ஆவல, நான் அமெரிக்காவுக்கு போயிடுவேன், குறைஞ்சது பொண்ணுக்கு ஒரு டிகிரியாச்சும் இருக்கனும் என கட்டளைகள் விதிக்க நிச்சயம் முடிந்துவிட்ட காரணத்தால் தலையை ஆட்டி வைத்தார் நம் தாரினியின் தந்தை. இதைக்கேட்டு விழிநீர் அரும்ப பாதி இமையுயர்த்தி நன்றிப்பார்வை வீசிய அந்த பொந்நிறப்பாவையின் மேல் அவனுக்கே தெரியாமல் ஈர்ப்பு வந்து அதை அவன் உணராமல், வேண்டாவெறுப்பாகவே நிச்சயத்தன்று மோதிரம் மாற்றியது தனிக்கதை.

ம்மா, அப்பா வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து நான் வீட்டை விட்டு கோயிலுக்கு, பக்கத்துவீட்டுக்கு, ஏன், மொட்டைமாடிக்குக்கூட போறதில்லை, பள்ளிக்கூடத்தை ரொம்ப கஷ்டப்பட்டுத்தான் முடிச்சேன், இந்த வயசுலயே கல்யாணத்துக்குக் கூட சம்மதிச்சிட்டேன், நல்லவேளையா அவர் என்னை மேல படிக்க சொல்லிருக்கார், பரிசமும் போட்டாச்சு இன்னும் என்னம்மா பயம்? என்னை ஏம்மா கரஸ்பாண்டன்சில படிக்க சொல்ற?!

ஏன் மவராணிக்கு டெய்லி மினுக்கிக்கிட்டு காலேசுக்குப் போயி படிச்சாத்தான் படிப்பு ஏறுமோ? வூட்டுல உக்காந்து படிச்சா ஏறாதோ? என்ற அம்மாவை திடுக்கிட்டுப்பார்த்தாள் மகள்.

உங்கப்பங்கிட்ட தலபாட அடிச்சிக்கிட்டேன், வயசுக்கு வந்தபின்ன அடுப்படில கெடக்கப்போற பிள்ளைக்கு படிப்பெதுக்குன்னு, கேட்டானா கிறுக்குப்பய, மவ படிக்கட்டும்னு படிக்கவெச்சான்! கெளரதியா இருப்ப, மருவாதியா பேசுவனு பாத்தா நீ என்னமோ மவராணி கணக்கா அதிகாரம் பண்ணுற என்று தாரிணியின் தலையில் குட்டினாள் பாட்டி.

அத கேளுங்கத்த நல்லா...

ம்ம்க்க்கும் இப்ப மட்டும் அத்தை மேல பாசம் வந்துருச்சாக்கும் என நினைத்துக்கொண்டாள் தாரினி.

தடிக்கழுதை, அத்தக்காரிக்கு போனப்போட்டு அழுது பரிட்சைக்கு போவுற, இதயும் அவகிட்டயே கேளுடி, நாங்களே நகை தொகைன்னு கேட்டாக்கூட சரின்னு பெரீய்ய எடமா பாத்து உன்ன சீக்கிரம் கட்டிப்புடலாம் வயித்துல நெருப்பைக் கட்டிக்கிட்டு அலையிற பயம் வுடும்னுபாத்தா மாப்பிள்ளை படி படிங்கிறாரு, வேற வழியில்லாம பலிகெடாவாட்டம் சரின்னு மண்டைய ஆட்டுன ஆர்டரு போடுரியோ ஆர்டரு?

அம்மா, உன்மேல இருக்க கோவத்துல அத்தை எனக்கு சப்போர்ட் பண்ணினாங்க, அவங்கமேல இருக்க வெறுப்புல என்மேல கோவத்தை வளத்துக்கிற நீ. என்ன பேசுற நீ?

என்னடி நாக்கு நீளுது? ஆமா, நிச்சயத்துக்கு வந்த பையன் கல்யாண தேதி வாசிக்கிறப்போ உன்ன படிச்சாத்தான் கட்டிக்கிவேன்னு சொல்றாவளே, நீ அவருக்கும் தூதுவிட்டு மயக்கிட்டியா?!

ச்சே, என்னம்மா பேசுற நீ?

இருக்கத தானடி பேசுறேன்?

பாரும்மா வாய்க்கு வந்தபடி பேசாத, உங்க மாப்பிள்ளைய நா இதுவரை பாத்ததுகூட இல்ல.

அடியாத்தி, என்னடி ஊடு அதிருறாப்புல கத்துற, வாக்கப்பட்டு போறவூட்டுல இப்படிக்கத்தி மானத்தை வாங்கிப்புடாத, உன் மாமியாக்காரி என்னை மாதிரி பொறுமையா இல்லாம இருந்திட்டா?

இருந்திட்டா?

ம்ம்ம், உன் திமிருக்கு உன் தலமுடிய ஆஞ்சிபுடுவா, பின்ன உன் நாக்குல சூடு வெச்சிருவா! மேனா மினுக்கி.

அம்மா, இப்ப நா என்ன சொல்லிட்டேன்னு இப்படிலாம் பேசுற?

ஒன்னும் இல்லடியம்மா ஒன்னும் இல்ல! நீ காலேசுக்குப் போ, கூத்தடிக்கப்போ எனக்கென்ன நீ எக்கேடும் கெட்டுப்போனா? உங்கப்பங்கிட்ட பேசிக்க!

என்னடி எங்கிட்ட பேசனும்?

ம்ம் உங்க புள்ளைக்கி, காலேசுல படிக்கனுமாம்!

இவ ஏன்டி வெளிய போறதுல துடியா இருக்கா? என்னடி விசயம்?

ஒன்னும்மில்லப்பா, இப்ப நா என்ன செய்யனும்?

ம்ம், மாப்பிள்ளைக்கு நீ படிக்கனுமாமில்லை?!

ஏன்டா மாப்பிள்ளைய மாத்திப்புட்டா என்ன, உன் நண்பன் புள்ளன்னு பாக்கிறியா?

அட, அதில்லம்மா! நண்பனா இருந்தா என்ன, எதிரியா இருந்தா என்ன? காசிருக்கு, புள்ளை நல்லாருக்கும். பரிசம் போட்டபின்ன மாப்பிள்ளைய மாத்தினா நம்ப மானம் என்னம்மா ஆவுறது? அப்பத்தான் பயலுக்கு இவளையும் அங்க இழுத்துக்கிட்டு போற யோசனை வந்துச்சாம், அதான் இவள படிக்கச்சொன்னானாம், அவங்கப்பன் சொல்றான், என்னா செய்ய?

என்று அலுத்துக்கொண்டபடி டாக்டராகும் எல்லா வாய்ப்பும், திறமையும் கொண்ட மகளை, அவளின் வண்ணமயமான கனவுகளை அடித்து நொறுக்கியபடி மறுபடியும் பஞ்சாயத்துக்குக் கிளம்பினார் கெளரவத்துக்குப் பிறந்தவர்!

கண்ணீரோடு அறைக்குள் முடங்கிக்கொண்டது அந்த கூண்டுக்கிளி!

(பி.கு: கிராமங்களில் மட்டுமல்ல, நகரங்களிலும் ஓடிப்போன ஒரு பெண்ணைக் கண்டு தன் பெண்ணும் அப்படி செய்வாளோ என்று அஞ்சி நம்பிக்கை இல்லாமல் பெண்ணின் வாழ்வில் படிப்பை கேள்விக்குறியாக்கும் பெற்றோர்கள் இருந்துகொண்டேதான் இருக்கிறார்கள்)

Tuesday, September 17, 2013

வண்ணங்களாலானது வாழ்க்கை ;)

<<This post is Dedicated to those girls who could do nothing other than being at home. Yeah, we too have Life and Fun :))>>



வணக்கம் :-) ஒரு நாளின் பத்து மணி நேரத்தை ட்விட்டரில் கை வலிக்க வலிக்க உளறிக்கொட்டி டைப்பி ஓட்டிக்கொண்டிருந்த அதே நறுமுகை தான். கொஞ்சம் உருப்படலாம் என முயற்சிக்கத் தொடங்கியிருக்கிறேன்.

படிப்பை முடித்த ஆணைக் காணும்போதெல்லாம் என்னப்பா வேலை என்ன ஆச்சு என்ற Default கேள்வியை எல்லோரும் எழுப்புவதைப்போல், பெண்ணைக் காணும்போதெல்லாம் என்னம்மா வீட்ல சும்மாதான் இருக்கியா போரடிக்கலியா? அந்த சீரியல் பாக்குறியா இந்த சீரியல் பாக்குறியா..(blah blah blah) என்றெல்லாம் எழுப்பப்படும் கேள்விகளை சமாளிக்கவே இயல்வதில்லை!

எதையாவது உருப்படியாக செய்யும்வழியில்(வீட்டிலிருந்தபடி) படித்திருக்கலாம் என்றால் நான் படித்ததோ IT. சரி வேறு வழியில்லை எல்லோரையும் டைப்பியே கொல்ல வேண்டியதுதான் என்று சாவடிப்பதில் அதி தீவிரமாக முயற்சித்த தருணத்தில் தான் சேலைக்கு கல் ஒட்டித் தரச்சொல்லி அத்தை வந்து நின்றார்கள்.

ஒரு நாளின் 1 மணி நேரத்தை அதுவரை அவ்வளவு எளிதாக ஆர்வமாக உலகை மறந்து  வண்ணங்களுடன் நான் செலவழித்ததில்லை (புத்தகம் படிக்கும் நேரத்தை தவிர). பெண்களுக்கும் வண்ணங்களுக்குமான ஆத்மார்த்தமான பந்தத்தை நான் உணர்ந்த தருணம் அது.



சரி இப்படியே நேரத்தை கடத்திவிட வேண்டியதுதான் என்ற முடிவுடன் பெண்களுக்கே உரித்தான மென்மை, சிகையலங்காரம், மெஹந்தி பற்றியெல்லாம் இன்னும் தீவிரமாக ஆன்லைனில் தேடத் தொடங்கியிருக்கிறேன்.. சிறுதொழிலாக உருமாற்றத்தான் ;))

இப்போது, எம்ப்ராய்டிங்  படிக்கத் தொடங்கியிருக்கிறேன்.
இங்கே-->> http://www.embroidery.rocksea.org/
http://www.youtube.com/user/anniescraftvideos

((http://www.youtube.com/user/AuntiesBeads Beads Jewellery Designers channel,
http://www.youtube.com/user/bebexo
http://www.youtube.com/user/LuxyHair hairstylist's channels
http://www.youtube.com/user/aishwaryamelia,
http://www.youtube.com/user/hennabeauty4u mehandi artists))


கொஞ்சம் தோட்டம், கொஞ்சம் எம்ப்ராய்டரி, அம்மாவிடம் டைலரிங், சமையல் என அதி அற்புதமாக நாட்கள் கடந்து கொண்டிருக்கிறது.

அவ்வப்போது சேத்தன் பகத், கல்கி, ஜெப்ரி ஆர்ச்சர், சாண்டில்யன், ப்ரீத்தி ஷெனாய் என் நேரத்தை ஆக்கிரமித்துக் கொள்ளத் தவறுவதில்லை.

இலவசமாக கிடைப்பது கசக்காது என்பதனால் கொஞ்சம் வேலையும் கிடைக்கத்தொடங்கியிருக்கிறது!

இந்த குரங்குமனம்,  M என இனிஷியலில் எம்ப்ராய்ட் செய்யப்பட்ட துணிகளை கற்பனையில் அதற்குள்ளாக உருவாக்கத்தொடங்கிவிட்டது!

சமீபத்தில் சந்தித்த ஒரு தோழி வேற வேலையே இல்லை, ரொம்ப போரடிக்கிது, டிவி தவிர வாழ்க்கைல ஒன்னுமே இல்லை ஏந்தான் காலேஜ் முடிச்சேனோன்னு இருக்கு என வருந்தியதை கேட்டதும்தான் இந்தப் பதிவை எழுதவே தோன்றியது.

அவரவரின் சொந்த விருப்பத்தை பொருத்து ஈடுபாட்டை பொருத்து நேரத்தை வீணடிக்காமல் வாழ்க்கையையே உருமாற்றலாமன்றோ?!

பிதற்றுவேன்,
நறுமுகை_/\_